Friday, May 28, 2010

வருங்கால சந்ததி - கலிகால சங்கதி

வானம் வெறிச்சிகிட்டு காச்சுது ராசா
இங்க வேர்வைதான் மழையா போச்சுது ராசா
கொஞ்சமா கோவத்த கொறச்சிக்க ராசா
எங்க ஊர எரிக்காம நிறுத்திக்க ராசா ..

மரம் வெட்டி ஓரமா போட்டாச்சு ராசா
மலையுயர கட்டிடம் வளத்தாச்சு ராசா
தண்ணி பஞ்சம் தலவிரிக்குது ராசா
எங்க பாவத்த சுமையா ஏத்துக்க ராசா ..

பாவத்துக்கு கொடகூலி குடுத்தாச்சு ராசா
பக்கமா கடல் இருந்தும் மழையில்ல ராசா
வெய்யிலில ஆடு மாடு பேசல ராசா
காத்து கூட அடம் பிடிச்சு வீசல ராசா ..

மண்ணு சமஞ்சது வீணா போச்சு
இங்க நிக்காம வாங்குது ஜனங்க மூச்சு
மேகத்துக்கு ஏங்கி வாடுறோம் ராசா
உன் தாகத்துக்கு பலியா சாகுறோம் ராசா ..

கலிகாலம் உச்சத்துல நீ வருவ ராசா
குதிர மேல உக்காந்து வதம் செய்வ ராசா
(குதிரைக்கு தண்ணி காட்ட எங்க போவ ராசா
கையில தண்ணி குப்பி வெச்சிக்க ராசா)
மனுசனா பொறந்தா பேசிருவோம் ராசா
எங்க ஆடத்துக்கு ஒருபுள்ளி வெச்சிருவ ராசா ..

தேரோட்டி கோயிலொன்னு கடல் பாத்து இருக்கு
மக்கா மொத்தமும் அத நம்பி இருக்கு
காஞ்ச உதட்டுல உன் பேரு இருக்கு
காதில் வாங்கிக்க மறுக்காத ராசா ..

அப்பனுக்கு அப்பன் செஞ்ச தப்பு ராசா
பூமி பொறப்புல சுகமில்ல ராசா
சாகத் துணிஞ்சு கெளம்பிட்டோம் ராசா
சொர்கத்துல துளி தண்ணி கெடைக்குமா ராசா?