Wednesday, May 13, 2015

Wrote this after Sashwat woke me up one morning, just at about dawn ..

கவுந்துறங்கும் குறிஞ்சிமலர் கண்விழித்துக் கதறியதில்
கலங்கடித்து எழுந்தேனடா ..
தாய்பாசம் தலைக்கேறி தந்தைக்கும் துடிதுடிக்கும்
துளிர்நேரம் கண்டேனடா ..
ஓவென்ற ஓலத்தில் ஒருநாழி தெரியாமல்
என்மார்பு சேர்த்தேனடா ..
பதைபதைக்கும் பொன்மேனி பிஞ்சாக எனைத்தழுவ
பித்தேறிப் போனேனடா ..

கார்கண்கள் கிளிக்குயில்கள் கூட்டாகக் கொண்டாடும்
கருணையின் காடாக்கினாய் ..
விரிந்த நெற்றியில் முக்கோடு சுருக்கெடுத்து
மழலையின் மேடாக்கினாய் ..
மூச்சிழுக்கும் மூக்கழகும் முனுமுனுக்கும் இதழழகும்
இரட்டைக் கிளவிகள்தாம் ..
சுற்றிவரும் இவ்வுலகம் இன்பமுற்றிசைப்பதும்
உன்னழகுக் குவியலில்தாம் ..

தேந்துளிரும் எழத்துவங்கும் அதிகாலை அதிசயத்தில்
என்னையேன் எழுப்பினாயோ ..
இருளற்று ஒளிப்படரும் மெலிதான முன்னுரையில்
தன்னழகை தேக்கினாயோ ..
புன்முறுவல் பரிசளித்து பிஞ்சுவிரல் பற்றியேதான்
உறக்கத்தில் உயிர்புகுந்தான் ..
வெண்ணிலாவாம் விண்வேந்தன் என்கையில் கண்ணுறங்க
கதிரவன்தன் கண்திறந்தான் ..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home